Friday, August 24, 2012

கட்டுப்பாடுகளை மீறுகின்றனரா தமிழ் அகதிகள்.. இலங்கை தமிழர் முகாம் பற்றிய ஆய்வு....

ஈழத்தில் இருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டு 29 ஆண்டுகளை தொடுகின்றது எம்மினம்.. இன்னும் 100 க்கு மேற்பட்ட தமிழக முகாம்களில் சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழ் அகதிகள் வாழ்ந்து வருகின்றனர்,  1983, 1990, 2006 என மூன்று பெரிய காலகட்டங்களின் போது இடம் பெயர்ந்த இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாம் ஏன் இங்கு இருக்கின்றோம் என்பதே தெரியாதவர்கள் 25வயதுக்குக்கு உட்பட்ட பலர் சொந்த மண்ணின் வாசனை தெரியாதவர்கள்.

தமிழகத்தில் அகதியாக வரும் ஈழத் தமிழர்கள்
ஈழத்தின் இறுதிக் கட்ட போர் முடிவு வரைக்கும் தாம் தாயகத்துக்கு மீண்டும் செல்வோம் அங்கு சொந்த நிலங்களில் குடியேறுவோம் என்ற நம்பிக்கையினை மனதில் கொண்டிருந்த பலர் இன்றைய போர் முடிவுக்கு பின்னரும் தாயகம் திரும்ப வழி இன்றி வாழ்ந்து வருகின்றனர். இது போருக்கு பின்னரான அமைதிதானா என்கின்ற அச்சம் எல்லோர் மனதிலும் குடிகொண்டிருக்கின்றது அத்துடன் ஆயுதங்கள்,கெடுபிடிகள் இல்லாமல் வாழ்ந்து விட்ட இந்த வாழ்க்கை அவர்களை திருபவும் அந்த சிக்கலான வாழ்க்கை முறைக்கு செல்ல தடுக்கின்றது.

இன்றய நிலையில் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இருக்கும் பெரும் நெருக்கடி அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லும் செயற்பாடுகள்தான் ஒவ்வொரு முகாம்களில் இருந்தும் கூட்டம் கூட்டமாக ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் தப்பிச் செல்லும் ஈழத்தமிழர்களைத் தடுக்க தமிழக காவல்துறையும், கியூப் பிரிவு ஆய்வாளர்களும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர் இந்த நடவடிக்கைகளின் போது சிக்கிக் கொள்ளும் அகதிகளும் இருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 100க்கு மேற்பட்ட இலங்கைத்தமிழரை கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர் கியூ பிரிவினரும், தமிழக காவல்த் துறையும்..

இன்றைய சூழ் நிலையில் ஈழத்தமிழர் முகாம்கள் இருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு பல்வேறு வகையான பிரச்சனைகள் அவ்வூரில் உள்ள தமிழக தமிழர்களை விட முகாம் மக்களால்தான் வருகின்றது என்கின்ற மனப்பாங்கு வந்துவிட்டது. அதில் பொய் இருப்பதாக கூற முடியாது சமிபத்தில் ஒரு பொது விடையமாக காவல்நிலையம் சென்றிருந்த போது அந்த காவல் நிலைய ஆய்வாளர் மிகவும் கடிந்து கொண்டார் வந்த விசயத்தை கூட அவர் விசாரணை செய்யவில்லை காரணம் முகாமில் இருந்து வந்திருக்கின்றார்கள் என்றவுடன் வந்த ஆத்திரம் அது. பின்னர் நாங்கள் அங்கு வந்த நோக்கத்தினை கூறிய போது சமாதானம் ஆனார். பின்னர் சம்பிரதாயமான அறிமுகத்தின் போது நான் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளராக மலைவாழ் மக்களுக்கான பணியினை மேற்கொண்டு வருவதை குறிப்பிட்டேன். அவருக்கு என்னைக் கடிந்து கொண்டதன் வருத்தத்தை மீண்டும் கூறினார்.

பேச்சு தொடர்ந்த போது அவரிடம் நேரடியாகவே கேட்டேன் . சார் முகாம் மக்கள் மீதான உங்கள் ஆத்திரத்துக்கு என்ன காரணம் என கேட்ட போது அடுக்கடுக்காக சம்பவங்களை கொட்டித் தீர்த்தார். சார் இவங்க பிரச்சனையால என் தலை உருளுது சார்... ஒரு நாளைக்கு இங்கு வரும் 10 பிரச்சனையில் குறைந்தது 6-7 வது முகாமில் இருந்துதான் வருகின்றது. பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை, எனது பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடி விட்டான்,கொலை, கொள்ளை,தவறான உறவுகள், வெளிநாட்டுக்கு களவாக போனவர்களைப் பிடித்து வருவது,  வேலைக்கு சென்ற இடத்தில் திருடிவிட்டான், குடித்து விட்டு கலாட்டா செய்வது என ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இதில் வெளியில் இருந்து வரும் விசாரணைகளிலும் பல முகாம் மக்கள் சம்மந்தப் பட்டதாகவே இருக்கின்றது என தனது விசனத்தை கூறி முடித்தார். அவர் கூறிய ஒவ்வொன்றும் உண்மையாக இருந்தன ஆனால் இவற்றை செய்கின்றார்கள் என்பதால் இங்கிருக்கும் முகாம் மக்கள் மீது மற்றவர்களுக்கு தவறான கண்ணோட்டம் பதிய ஆரம்பித்து இருக்கின்றது. இதனால் அன்றாடம் கூலி வேலைக்காக வெளியில் செல்லும் முகாம் மக்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்து வருகின்றது.

முன்னர் எல்லாம் நல்லாத்தான் இருந்தாங்க இப்பதான் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கு என்று கூறும் கூற்றிலும் பொய் இருப்பதாக இல்லை இன்று எல்லா விதத்திலும் தமிழகத்தில் இருக்கும் அகதிமுகாம்கள் காவல்த்துறைக்கும் கியூப் பிரிவுக்கும் பெரும் தலையிடியாகவே இருந்து வருகின்றது.  உண்மையில் தாமாக திரும்பி தாயகம் செல்லாத வரைக்கும் தமிழக அரசுக்கும் முகாம் மக்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முடியாத அரசியல் சூழ்நிலை. தமிழக தமிழர்களைப் போன்று நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் என பல கோணத்தில் பிரச்சனைகளைக் கையாள முடியாத நிலைகளில் இருக்கின்றன.

 இன்றைய தமிழகத்தின் செய்தி நிலவரங்களில் ஈழத் தமிழர்களின் அவுஸ்ரேலிய பயணம் பற்றிய செய்திகள் இடம்பெறாமல் இருப்பது இல்லை. சில அதிகாரிகள் நேரடியாகவே ஆதங்கப் பட்டுக் கொள்கின்றனர். உங்களுக்கு என்னையா குறை வச்சம் மாதத்துக்கு மாதம் அகதிக் கொடுப்பனவு, குடும்ப தலைவருக்கு 1000, மற்றவர்களுக்கு-750, முதியோருக்கான 1000 ரூபாய், ரேசன் பொருட்கள், அரச இலவச கொடுப்பனவுகள் என எல்லாம் வழங்கப் பட்ட பின்னரும் உங்கள் பிரச்சனைதான் என்ன என்பதை கேட்டு நிற்கின்றனர். உண்மையில் அவர்கள் கேட்பதிலும் தவறில்லை இவை அனைத்துமே இங்கு வாழும் எல்லா முகாம் மக்களுக்கும் கிடைக்கதான் செய்கின்றது.... அப்படியானால் ஏன் இந்த பிரச்சனைகள் ஈழத்தமிழர்கள் மோசமான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி விட்டனரா என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது.....

கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் எல்லோருக்கும் பிடித்த ஈழத் தமிழர்கள் இன்று தமிழகத்தில் தவறான பார்வைக்குள் பார்க்க படுவதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டிய நிலை இருக்கின்றது ஆனால் அது மக்களின் செயற்பாடுகளைப் பற்றி அல்லாமல் அவர்கள் வாழ்விடங்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதே எனது பதில்.

ஈழம் இந்து சமுத்திரத்தின் முத்தாய் இருந்த தமிழனின் பண்பாட்டை உலகுக்கு சொன்ன ஒரு தனிச் சமுகம். இன்றும் உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழருக்கு தமிழையும்,தமிழரின் கலாச்சாரத்தயும் பரப்பிய பெருமை இருக்கின்றது. ஆனால் இங்குள்ள நிலை முற்றிலும் மாறுபட்டதாய் இருக்க காரணம் என்ன என்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.

1983 ம் ஆண்டு தமிழகத்துக்கு ஈழத்தமிழர்கள் அகதிகளாய் வந்தபோது அவர்களை கையில் தாங்கிக் கொண்டது தமிழக அரசும் மத்திய அரசும், காரணம் அப்போதிருந்த ஆட்சி நிலைகள் ஈழத் தமிழரின் வாழ்க்கையை பேணிப் பாதுகாக்கும் ஆட்சியாக இருந்ததுதான், தமிழ் நாட்டில் எங்கும் செல்லும் வசதி, பேரூந்து, புகையிரதங்களில் இலவசமாக பயணம் செய்யக் கூடிய வசதி என எல்லாவிதமான சலுகைகளையும் பெற்றதோடு தம்மை தங்கள் வீட்டு உறவைப் போல எல்லா மக்களும் தாங்கிக் கொண்டதாக கூறுகின்றனர் 83 ம் ஆண்டுகளில் வந்த முகாம் தமிழர்கள், அதன் பின்னர் 1990 ம் ஆண்டளவில் நடைபெற்ற மிகப் பெரிய புலம்பெயர்வு இவர்களுக்கு மத்திய அரசின் செல்வாக்கு இல்லாத போதும் தமிழக அரசு இவர்களிம் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் முகாம்கள் அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குட்டிக் கிராமங்கள் போல் முளைத்தன இந்த ஈழத் தமிழர் அகதி முகாம்கள் தற்போதய நிலவரப்படி 117 முகாம்கள் வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப் படுகின்றது.
தமிழ் நாட்டில் உள்ள முகாம்கள்

2006 இல் இருந்து போரின் உச்சக்கட்டத்தை அடைந்த 2009 வரை தமிழர்கள் புலம் பெயர்ந்து வந்த போது மத்திய அரசுக்கும் சரி, மாநில அரசுக்கும் சரி அது ஒரு தலையிடியாகவே பட்டது. இது மத்திய அரசின் ஒத்துளைக்காத செயற்பாடுகளால் வந்த தன்மையாக இருக்கலாம் அல்லது மக்கள் பட்டு வந்த துயரினைப் பார்த்து தமிழகத்தின் உறவுகள் கொண்ட கொந்தளிப்பாலும் இருக்கலாம். ஆனால் இந்த காலத்தில் இருந்த தமிழக அரசின் செயற்பாடுகள் வந்த ஈழத்தமிழர்களை நல்லபடியாக கவணித்தாவது இலங்கையில் நடந்துமுடிந்த போருக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டதாகவே இருந்தது. அனைத்து இலவச திட்டங்களையும் ஈழத்தமிழர் பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது, அதுவரை கொடுக்கப்பட்டு வந்த அகதிகள் கொடுப்பனவை அதிகரித்தது, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், சென்னை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இலவசமாக் கலை அறிவியல் கல்வி பயிலக் கூடிய வாய்ப்பு என எல்லாமே கொண்டு வந்து கொடுத்தார்கள். இது இங்கு வந்த அகதிகளில் பலருக்கு சொந்த நாட்டை மறக்கச் செய்த செயற்பாடுகள்,  வந்த இடம் சொர்க்கம் என்று தோன்ற செய்த செயற்பாடுகள். 

தமிழ் நாடு நகர் புற சேரி
தூத்துக்குடியில் ஒரு கிராமம்
ஆனால் உண்மை இதைவிட மோசமாக இருந்தது தமிழகத்தில் வாழும் கிராமங்கள் பலவற்றிற்கு பணியின் நிமிர்த்தமாக சென்ற போது அங்குள்ள மக்களின் வறுமையும், அவர்கள் படுகின்ற துயரங்களும் ஒருகணம் யோசிக்க வைத்தது. சொந்த மண்ணில் அன்றாடம் சோற்றுக்கு இல்லாமல் அலையும் இந்த மக்களைக் கண்டு கொள்ளாமல் எம்மை ஏன் இந்த தாங்கு தாங்குகின்றது இந்த அரசு .. என எண்ணத் தோன்றியது. சேரிகள், கிராம குடிசைகள் இலவசங்களுக்கு சண்டை போட்டு மிதிபட்டு இறந்து போன மக்கள் என தமிழகத்தில் இன்றளவும் சரி செய்யப் படாமல் இருக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் தேவைக்கு அதிகமாகவே இலங்கை தமிழருக்கு செய்து வருகின்றார்கள் என்றே தோன்றியது. இந்த எண்ண ஓட்டங்களுடனே கடந்த 5 வருடங்கள் ஓடி விட்டன . 

இலங்கையில் போரும் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளைத் தொட்ட நிலையில் வந்த விருந்தாளி திரும்பி போகாத நிலையாகி விட்டது இன்று தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழரின் நிலை. போர் நடக்கும் வரை ஒன்று பட்டிருந்த இந்த சமுகம் இன்று இயக்கங்களாக பிரிந்திருப்பதும், கலாச்சாரத்தை மறந்திருப்பதும் தமிழகத்தின் அரசியலில் குழப்பங்களை ஏற்பட காரணமாய் இருப்பதாக நினைக்கின்றது தமிழக அரசும், மத்திய அரசும் அத்துடன் மத்திய மாநில பட்ஜெட்டில் அகதிகளுக்கான செலவின ஒதுக்கீடும் ஒரு பெரிய பிரச்சனையாக அமைகின்றது ஐ. நா வின் அகதிகளுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடாத காரணத்தினால் அகதிகளுக்கு ஏற்படும் எல்லா செலவினங்களையும் தாங்கிக் கொள்ளும் தலையிடி மத்திய அரசுக்கு அத்தோடு தமது தலைவர் அமரர்.ராஜிவ் காந்தியை கொன்ற சமுகம் என்ற எண்ணத்தோடே இன்றுவரையும் தனது பார்வையை செலுத்துகின்றது ஆளும் மத்திய அரசு. இவைகள் பொதுவாக இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் இன்றைய பிரச்சனை என்ன இங்கிருக்கும் ஈழத் தமிழர்களால் இங்கு வசிக்கவும் முடியாமல் தாயகத்துக்கும் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலைக்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்...  

இது பற்றிய அடுத்த பதிவு தொடரும்.......